கல்மாடும் கல்நெஞ்சும்

 

 

அன்றும் இன்றும் என்றும் மாறாத ஒரு இனமாக உள்ளனர் இந்த பிறமண்ணினர் எனும் பிறாமணர்கள். 2018ல் சிலைகளை தொட்டால் தோஷம் வரும் என்று ஏமாற்றும் கும்பல் 1950 நடந்த நிகழ்வாக குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கல்மாடும் கல்நெஞ்சும் என்ற கட்டுரையை இந்தப் பதிவில்  காண்போம்

குத்தூசி குருசாமி அவர்கள் எழுதிய கட்டுரை 18-8-50 வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை சமயத்துறையில் ஏற்பட்ட சமுதாய மாற்றத்திற்கு மத வாதிகள் எள்ளளவும் காரணமில்லை. தந்தைப் பெரியார் , அவரால் தயாரிக்கப்பட்ட குத்தூசியார்  போல்மேலும் பல சுய மரியாதைகாரர்களும் நடத்திய சமுதாய போராட்டங்களே தான் காரணம்.

பலரும் சொல்லுவது போல் ஏன் நடந்த முடிந்ததை கூறி கொண்டிருக்கிறீர்கள், இப்போது வேறுபாடுகள் இல்லை என்று கூறுபவர்களுக்கு என் பதில் நாம் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது … இன்று மக்கள் காலில் முள் குத்தாமல் செல்வதற்கு நம் முன்னோர்களில் எத்தனை எத்தனை உறவுகள் முள்ளில் நடந்து முட்களை அகற்றி நமக்கு பாதை வகுத்தனர் என்பதை நினைவுகூர்ந்தால் தான், மீதமுள்ள முட்களையும் நாம் அகற்றி வருங்கால சந்ததியினருக்கு நல்ல பாதையமைப்போம் ….. வருங்கால சந்ததியினரும் முட்கள் விழாமல் பார்த்துக்கொள்வர் என்பதோடு என் விளக்கத்தை முடித்து கொண்டு. குத்தூசியார் வெளியிட்ட கட்டுரையை அப்படியே பகிர்ந்துள்ளேன்

மனிதன் மாட்டைத் தொடலாம்! அடிக்கலாம்! கொல்லலாம்! தின்னலாம்! கேட்பாரில்லை ஆனால் கல்மாட்டைத் தொட்டால் மட்டும் குற்றம்!

என்னைத் தீண்டாதே! நான் எலெக்டிரிசிட்டி உன் மீது ஷாக் அடிக்கும் என்கிற ஜாதியார் இன்னமுந்தான் இருக்கிறார்கள்! ஆனால் இவர்க்களுக்குத் தனி இரயில் வண்டியோ , பஸ்ஸோ ட்ராமோ கிடையாது . பீஷ்வாக்கள் ஆட்சியாயிருந்தால் , ‘பிராமணர்களின் தனி வண்டி,’ என்று ஒரு வண்டியே இருக்கும்

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக புது அரசியல் சட்டம் தம்பட்டமடிக்கிறது. அது ஒரு குற்றம் என்று கூடக் கூறுகிறது. ஜாதி ஒழிந்துவிட்டதாகக் கூறி, வகுப்புவாரி உரிமையை கூடக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். இந்த மாகான சர்காரோ, கோவில்களையெல்லாம் பொது மக்களுக்கு திறந்துவிட்டதாகக் கூறி, சட்டமும்செய்தும் படமும் பிடித்து, பத்திரிகையிலும் போட்டு விட்டார்கள்!

“கோவில் மூலஸ்தானத்துக்குள் நுழைந்து பார், கோவில் மடப்பள்ளிக்குள் நுழைந்துப் பார்! சட்டம் குறுக்கே நிற்காது!” என்று நான் ஊர் ஊராகச் சொல்லிக் கொண்டுதான் வருகிறேன். கோவில் நுழைவு உரிமையின் லட்சணத்தைச் சோதனை செய்ய வேண்டுமென்பது என் ஆசை. யாரோ ஒரு நண்பர் வேறொரு மாதிரி சோதனை செய்திருக்கிறார், அவர் என்னைப் போன்ற சாதரணமானவரல்ல! ஒரு விஸ்வகர்மா பிராமணர்! ஆமாம் சாட்சாத் 1- தேவாங்க பிராமணர் 2- சவுராஷ்டிர பிராமணர் என்று இன்னும் எத்தனையோ பேர் தங்களை பிராமணர்களாக்கிக் கொண்டிருக்கிறார்களல்லவா?

விஷயம் இது தான் . ஆடி மாதம் 23-ந் தேதியன்று நெ.பெரியசாமி பத்தர் என்பவர் கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வர கோவிலுக்குள் சென்றாராம். அங்கிருந்த நந்தியை (கல் மாட்டை)த் தொட்டாராம்! எப்படி தொடலாம்?அக்கிரகாரத்து பிறவிகள் உடனே அவர்மேல் விழுந்து பிடுங்கினவாம்! அடியும் கூட உண்டாம்!  சம்ரோட்சணை செய்வதற்காக என்று ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாராம்!

கம்யூனல் ஜீ.ஓ. கிளர்சிக்கு ஆதரவாக யாரேனும் இம்மாதிரிக் கற்பணை செய்து எழுதியிருக்கிறார்களோ என்று சிலர் சந்தேகிக்கலாம்!

கீழக் கடலங்குடித் தெருவிலுள்ள அவரே கடிதம் எழுதியிருக்கிறார் , பிள்ளையார் சுழியில் துவக்கி! ஒருகால் அந்தக் கடிதமும் எப்படியிருக்குமோ என்று நினைக்கலாமே!

இதோ இன்னொரு ருசு! ரசீது நம்பர் 2984 தேதி 7-8-1950

”பெரிய நந்தியைத் தொட்டதினால் சம்ரோஷணை செய்வதற்காக மேற்படியார் மூலம் வரவு” என்றும் காரணம் கூறப்பட்டிருக்கிறது. அக்கவண்டெண்ட் இனிஷியலும், எக்ஸ்கயூட்டிவ் ஆஃபீசர் (ஆர். கோவிந்தராசு) கையெழுத்தும் இருக்கின்றன.

இன்னும் என்னய்யா வேண்டும்?

”சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று நந்தன் அன்று கூறினானான்! நந்தி விலகி நின்றதாம்! இன்று அதே நந்திக்காக ஒருவர், அதுவும் சாட்சாதி விஸ்வகர்ம பிராமணர் ஒரு ரூபாய் அபராதம் செலுத்துகிறார்!

நமக்கும் ஒரு அல்லாடியோ, ஒரு வி.வி.எஸ்.ஸோ கிடைத்தால் இது பற்றி ஒரு வழக்கு தொடர்ந்து பார்க்கலாம், நாம் தான் நாதியற்ற இனமாச்சே, துரோகிகளும், சமயசஞ்சீவிகளும், சுய விளம்பரக்காரர்களும், டம்பாச்சாரிகளும் நிறைந்த இனமாச்சே

அபராதம் மட்டுமா? அக்கிரகாரத்தின் மலத்தை வாரித் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளச் சொன்னாலும் (இப்போதும் நம் இனந்தானே மலம் எடுக்கிறது? அவர்கள் எங்கே எடுக்கிறார்கள்?) நாம் மனப் பூர்வமாகச் செய்ய வேண்டியதுதானே?

நானாயிருந்தால், “ அபராதம் கொடுக்க முடியாது; உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்”: என்று சொல்லியிருப்பேன்!

மானமுள்ள திராவிடம் கோவிலுக்குள் செல்லமாட்டான், அப்படிச் சென்றால் எதையும் தொட வேண்டும். எங்கேயும் செல்ல வேண்டும். இந்த வம்புக்காகத் தான் அந்த வம்பர் குகைக்குள் நான் நுழைவதேயில்லை! என் தோழர்களும் நுழைவதில்லை!!!!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.