யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1

கணியன் பூங்குன்றனார்

தமிழில் பேச்சாளர்கள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ பேசச் சென்றால் இந்த பாடல் வரியை மேற்கோளாகக்காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே மேற்கோள் காட்டி விட்டு வேறு கருத்துக்களைப் பேசச் சென்று விடுவார்கள். அதேபோல், இப்படிப் பேசுபவர்களில் ஒருவராவது இந்தப் பழந்தமிழ் பாடலை முழுமையாகப் படித்திருப்பார்களா; அப்படியே படித்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்திருப்பார்களா என்று வினா எழுப்பிச் சிந்திப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஏனெனில் அண்மையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் உயர்ந்த அறிவியல் சிந்தனையாளரும் ஆன பாரத இரத்தினா உயர்திரு APJ அப்துல் கலாம் அவர்கள் கூட இந்த வரியை மேற்கோள் காட்டிப் பேசியதாகவும், அவர் தமிழில் புலமை பெற்றவராக இருந்ததாகவும் தொலைக் காட்சிச் செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அவரே கூட இந்தப் பாடலை முழுமையாகப் படித்து யாருக்கும் பொருள் உரைத்ததாகத் தெரியவில்லை. ஒரு விஞ்ஞானி, மற்றொரு விஞ்ஞானியோ அல்லது சிந்தனையாளனோ அளிக்கும் கட்டுரை அல்லது பாடலின் ஒரு வரியை மட்டுமே படித்து மேற்கோள் காட்டிப் பேசினால் மற்ற விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வார்களா? அது பகுத்தறிவுக்கோ, விஞ்ஞான முறைக்கோ உகந்ததா? ஆனாலும், அனைவரும் இதே முறையிலேயே தமிழர்களது உயர்ந்த சிந்தனைகளை இருட்டடிப்புச் செய்து வருகின்றனர் அல்லது இருட்டடிப்புச் செய்வதற்குத் துணை போகின்றார்கள்.

கணியன் பூங்குன்றனார் எழுதிய இந்தப் பாடலின் முழுப் பொருளை சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். இந்தப் பாடல் தமிழர் மதத்தையும், அறிவியலையும் முழுமையாக நமக்குத் தெரிவிக்கின்றது. இப் பாடலையும், விக்கிபீடியாவில் தந்துள்ள இதன் பொருளையும் கீழே தருகின்றோம்.

புறநானூறு 192

“யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ”(புறம்: 192)

பொருள்

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.

எல்லா ஊரும் எம் ஊர்

எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

அடுத்த பதிப்பில்

இனி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் வழங்கி அருளிய குருபாரம்பரியத்தினையும், இந்து வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு இப்பாடலுக்கான ஆய்வினைப் அடுத்த பதிப்பில் பார்க்கலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.