யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை – 2

Gurudevar_Devakumarar

இனி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் வழங்கி அருளிய குருபாரம்பரியத்தினையும், இந்து வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு புறநானூற்று பாடலுக்கான ஆய்வினைப் பார்க்கலாம்.

1) யாதும் ஊரே! யாவரும் கேளிர்! – உலகில் முதலில் தோன்றிய நிலப்பரப்பில் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றிட உயிரினங்களின் தலைவன் போன்ற நிலையைப் பெற்ற மணீசர்களுக்கு மூலப் பதினெண்சித்தர்கள் கற்றுக் கொடுத்த மொழி தமிழ்மொழி. பிற்காலத்தில் கடல்கோள்களினால் பிற நிலப்பரப்புக்கள் கடலுக்கு உள்ளிருந்து வெளிவந்த போது, அங்கெல்லாம் குடியேறி வாழ்ந்தவர்கள் இந்தத் தமிழ் பேசிய மனிதர்களே! எனவே அனைத்து உலகப் பகுதிகளும் வாழக் கூடிய ஊர்களே என ஏற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள்! அந்தந்த இடத்தின் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மொழி மாற்றங்களைச் செய்து கொண்டாலும், உலகெங்கும் வாழும் அனைத்து இனத்தவர்களும் இந்த தமிழ் பேசும் மனிதர்களின் வழி வழி வந்த உறவினர்களே!

2) தீதும் நன்றும் பிறர் தர வாரா! – ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படுகின்ற துன்பங்களும் இன்பங்களும் அவரவரின் முற்பிறவிப்பயன்களாகவே மீண்டு வருகின்றன. பிறரால் தீங்கு இழைக்கப் படுவது போலவும், நன்மை செய்யப் படுவது போலவும் தெரிந்தாலும், அவை உண்மையில் அவரவரின் வினைப் பயன்களே!

3) நோதலும் தணிதலும் அவற்றோரன்ன! – ஒருவரது உடலுக்கும்மனதுக்கும் அறிவுக்கும் சிந்தைக்கும், …. வருகின்ற நோய்நிலைகளும், நோயற்ற வலிமையான நிலைகளும் முந்தைய வரியில் கூறியது போலவே அவரவரின் வினைப் பயன்களால் விளைவனவே!

இதையே பிற்காலத்திய வள்ளுவர்

 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

  பிற்பகல் தாமே வரும் (குறள் – 319)

என்றார்.

4) சாதலும் புதுவதன்றே! – இறப்பு என்பது புதியது அன்று. மீண்டும் மீண்டும் பிறந்து இறந்த அனுபவங்களை கணக்கற்ற முறை பெற்று அனுபவத்ததினால் இறப்பு என்பதை எண்ணி அழுவதோ! வருந்துவதோ! இல்லவே இல்லை.

ஏனெனில், திருவாசகத்தில் விளக்கமாக :-

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

 பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகிக்

 கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

 வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

 செல்லாஅநின்ற இத்தாவரச் சங்கமத்துள்

 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமானே!

இந்தக் கருத்தை விளக்குகின்றனர் சித்தர்கள்.  அதாவது எல்லாப் பிறப்பும் பிறந்திருக்க வேண்டுமென்றால், எல்லாப் பிறப்புக்களிலும் இறந்திருக்க வேண்டும். எனவே, மனிதருக்கு இறப்பு என்பது புதியதல்ல! இன்றைக்கு இறப்பைப் பார்த்து அச்சமும்,மாச்சரியமும் பெறுவதில் பொருளே இல்லை!

வள்ளுவரும் மிகத் தெளிவாக

  உறங்குவது போலும் சாக்காடு! உறங்கி

  விழிப்பது போலும் பிறப்பு

என்று இறப்பவர்கள் மீண்டும் பிறந்து இறப்பதைப் பற்றிக் கூறுகின்றார்.

5) வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

    இன்னா தென்றலும் இலமே, – முதல் முறையாக ஒரு இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவித்தால்தான் மகிழ்ச்சியும் துன்பமும் புதிதாக இருக்கும். ஆனால், எண்ணற்ற முறை அவற்றை அனுபவித்தவன் பெரிதாக இன்பத்தின் போது மகிழ்தலும், துன்பத்தின் போது வருந்துவதும் இருக்க முடியாது. எண்ணற்ற பிறப்புக்கள் எடுத்ததை உணர்ந்தவர்கள், மறவாதவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்க  மாட்டார்கள்.

6) மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது

    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

   முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

   காட்சியில் தெளிந்தனம்

– வானத்திலிருந்து வீழும் நீர்த்துளிகள் பெரும் வெள்ளமாக கற்பாறைகள் இடையே வழியமைத்து பெரும் ஆறாக இரு கரை அமைத்து செல்கையில் அந்த ஆற்று வெள்ளத்தில் செல்லும் தெப்பம் போலவே ஆருயிர் பிறப்புக்களிடையே செல்கின்றது. மனித வாழ்வு என்பது எத்தகையது என்பதை நன்கு ஆராய்ந்து தெளிவாகச் சான்று காட்டி எங்களுக்கு வழங்கியவர்கள் எங்களது முன்னோர்கள் என்று கணியன் பூங்குன்றனார் கூறுகின்றார்.

இதையே ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் தமது குருபாரம்பரியத்தில் முன்னோர்கள் வழங்கிய வாசகமாக,

‘ஊழ்வினை, விதி எனும் இரு கரைகளிடையே வற்றாது ஓடும் ஆறு

போன்றதே மனித வாழ்க்கை.

என்று வழங்கி அருளியுள்ளார்.  அதேபோல், ‘முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு எனும் முப்பிறப்புக் கொள்கையை உடையதே பதினெண்சித்தர்களின் சித்தர் நெறியான மெய்யான இந்துமதம்.’ என்று விளக்கம் வழங்குகிறார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.

7)    ஆகலின், மாட்சியின்

    பெரியோரை வியத்தலும் இலமே,

    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

– இப்படி மனித வாழ்க்கையின் தன்மையை தெளிவாகப் புரிந்ததனால், உணர்ந்ததனால் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் மாண்புமிக்க பெரியோரைக் கண்டு வியக்கவோ அல்லது சிறியோராகச் செயல்படுபவர்களைக் கண்டு இகழதலோ இல்லவே இல்லை. ஏனெனில் நீர்வழிச் செல்லும் தெப்பம் போலவே ஒரு சிலர் புகழையும் செல்வங்களையும் பெற்று உயர்ந்தோராக வாழ்ந்து மறைவர்; அது போலவே பலர் எத்தகைய சிறப்பையும் பெறாமல் வாழ்ந்து மறைவர். இந்த இரு நிலைகளும் அவரவர் ஊழ்வினையாலும் விதியாலும் அந்த உயிர் குடியிருக்கும் உடலுக்கு அமைவதே என்பதை உணர்ந்ததனால் அச்சம், கூச்சம், இச்சை, ஆச்சரிய, மாச்சரியங்களை வென்றே நாங்கள் வாழ்கின்றோம் என்கின்றார் கணியன் பூங்குன்றனார்.

அப்படி வாழ்பவர்கள் பலராகினால்தான் உலகம் மேம்பட்ட நிலையை அடைகின்றது என்று நாம் கூறலாம். எனவே இந்தப் பாடலை முழுமையாக அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மீண்டும் மீண்டும் அன்றாடம் படித்துப் பொருள் விளங்கிக் கொண்டால் உருவாகிடும் கற்றவர்கள் மிக உயர்ந்தவர்களாகவே வாழுவார்கள் என்பதில் ஐயமே இல்லை. இது தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தப் பாடலையே மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள அனைத்து மொழியினர்களும் கற்றுக் கொண்டால் உலகமே உயர்ந்த நிலையை நோக்கிச் செல்லும்.

இந்தப் பாடல் தமிழர் பண்பாட்டை விளக்குகின்றது என்று இன்றைய தமிழறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். தமிழர் பண்பாடே தமிழர்களது சமூக விஞ்ஞானம். தமிழர்களது சமூக விஞ்ஞானமே தமிழர்களது மதம். இந்தப் பாடலின் கருத்தாகிய மறுபிறவிக் கொள்கையையே உயிர்நாடிக் கொள்கையாக வழங்கும் சித்தர் நெறி எனும் சீவநெறியே தமிழர்களது வாழ்வியல் நெறி. இந்தச் சீவநெறியே சிவ நெறி, சைவ நெறி என வழங்கலாயிற்று. இந்தச்சீவநெறியே மெய்யான இந்துமதம் எனப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளால் அழைக்கப் படுகின்றது. நடைமுறையில் இருக்கும் இந்த மெய்யான இந்துமதத்திற்கான ஏட்டறிவினை வழங்குவது ஆதிசிவனார் அருளிய இந்துவேதம்.

மேலும் விளக்கங்களைப் பெற ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எழுதியவைகளையும், அச்சிட்டுள்ள புத்தகங்களையும் “newsletters.gurudevar.org”, “books.gurudevar.org” என்ற வலைத்தளங்களில் படிக்கலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.